Press "Enter" to skip to content

விண்வெளி நிலைய பணி – சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்.

பீஜிங்:

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

தியான்ஹே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், (56) லியு போமிங் (54) மற்றும் டாங் ஹோங்போ (45) ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 2 முறை விண்வெளி நடை பயணத்தையும் மேற்கொண்டனர்.

இதற்கிடையே, திட்டமிட்டபடி 90 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் காலை சென்ஷு 12 விண்கலத்தில் பூமிக்குப் புறப்பட்டனர்.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.30 மணிக்கு சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் சென்ஷு 12 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து, அங்கு தயார் நிலையில் இருந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் விண்கலத்தைத் திறந்து விண்வெளி வீரர்கள் 3 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர். விண்வெளி வீரர்கள் 3 பேரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »