Press "Enter" to skip to content

சமூக நீதி நாள் கொண்டாட்டம் சமத்துவத்தின் அடையாளம்- திருமாவளவன் அறிக்கை

பெரியார் என்றால் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் புரட்சிகர நடவடிக்கை போற்றுதலுக்குரியதாகும் என்று தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17, இனி ஆண்டுதோறும் “சமூகநீதி நாளாக’’ கொண்டாடப்படும். அத்துடன், இந்நாளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட யாவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பார்கள்.

இதனை தமிழக முதல்வர் செப்டம்பர் 6 அன்று சட்டப்பேரவையில் பெருமிதம் பொங்க அறிவித்தார்.

அவர் பெரியாரின் பாசறையில், அண்ணாவின் அரவணைப்பில், கலைஞரின் வழிகாட்டுதலில் சமூகநீதி கொள்கை ஈர்ப்பால் வளர்ந்த ‘திராவிட வார்ப்பு’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அத்துடன், இந்த அரசு ‘பெரியார் அரசு அல்லது சமூகநீதி அரசு’ என்பதை ஊருக்கு உலகுக்கு உரத்துச் சொல்லும் புரட்சிகரமான அறிவிப்பாகும். இது சனாதன பழமைவாத சமூகநீதிக்கு எதிரான பிற்போக்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிகரமான நிலைப்பாடாகும். முதல்வரின் இந்தக் கொள்கைத் துணிவை விடுதலை சிறுத்தைகள் சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.

பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, பார்ப்பன வெறுப்பு என்றெல்லாம் அடையாளப்படுத்துவோருக்கிடையில், அவரை சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் இந்தப் புரட்சிகர நடவடிக்கைப் போற்றுதலுக்குரியதாகும்.

பிறப்பின் அடிப்படையில் மனிதருக்கிடையில் உயர்வு தாழ்வைக் கற்பித்து அதனை நிலைப்படுத்திய கோட்பாடு தான் சனாதனம். அவற்றைப் பரப்பி, அதனால் இன்றுவரை பயன் துய்ப்பவர்கள் பார்ப்பனர்களே என்று அவர்களை அடையாளப்படுத்தியதும் அம்பலப்படுத்தியதும் பெரியார்.

இந்நிலையில்தான் தமிழக அரசு பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என அறிவித்துள்ளது. இது சனாதனத்துக்கு எதிராக சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கோட்பாட்டு யுத்தமே ஆகும்.

எனவே, இன்று எனது அறைகூவலையேற்று சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இந்த கோட்பாட்டு அறப்போரில் களமிறங்கி உறுதி மொழியேற்ற என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் யாவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »