Press "Enter" to skip to content

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19 கட்சிகள் பங்கேற்ற கூட்டணி கட்சிகள் கூட்டம் கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி காணொலி காட்சி மூலம் நடந்தது.

இந்த கூட்டத்தில் புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய மறுப்பது, கல்லெண்ணெய், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்டம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து தமிழகத்தில் செப்டம்பர் 20-ந்தேதி (இன்று) மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

அதன்படி பா.ஜனதா அரசை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு கட்சி அலுவலகங்கள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் கட்சி நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி கனிமொழி ஆர்ப்பாட்டம் செய்தார்.

பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, குரோம்பேட்டை ராஜாஜி தெருவில் தனது வீட்டு முன்பு கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு இன்று காலை மத்திய அரசை கண்டித்து கம்பத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இதில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வேப்பேரி பெரியார் திடல் முன்பு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் முன்பு மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், டி.ராஜா ஆகியோர் ஓசூர் தொடர் வண்டி நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மண்ணடி வட மரைக்காயர் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால் வளசரவாக்கம் அன்புநகரில் உள்ள தனது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

‘ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் இந்திய எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமையிலே ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்.

மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்.

மறுக்காதே, மறுக்காதே ரத்து செய்ய மறுக்காதே, மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய மறுக்காதே.

வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே விவசாயிகளை வஞ்சிக்காதே.

மோடி அரசே மோடி அரசே உயருது உயருது கியாஸ் விலை உயருது.

கட்டுப்படுத்து கட்டுப்படுத்து கியாஸ் விலையை கட்டுப்படுத்து.

ஒன்றிய அரசே, மோடி அரசே கட்டுப்படுத்து கட்டுப்படுத்து கல்லெண்ணெய்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்து.

மோடி அரசால், மோடி அரசால் பொருளாதார சீரழிவு திண்டாட்டம். அதனால் அதனால் வேலையில்லா திண்டாட்டம்.

மோடி அரசே, ஒன்றிய அரசே விற்காதே விற்காதே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே’ ஆகிய கண்டன கோ‌ஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »