Press "Enter" to skip to content

ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அபார வெற்றி பெற்றது.

மாஸ்கோ:

450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது.

அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு புதின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்பட்டது.

மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உள்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. 

ஆரம்பத்தில் இருந்தே அதிபர் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதன்படி இந்த தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அத்துடன், மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் மூதத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »