Press "Enter" to skip to content

2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: நெல்லை, தென்காசியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெண்களும், முதியவர்களும் ஆர்வமுடன் ஓட்டு போட்டு சென்றனர்.

நெல்லை:

நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு ஆகிய 4 ஒன்றியங்களிலும் 783 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.

மொத்தம் 567 வாக்குச்சாவடியில் நடைபெறும் ஓட்டுப்பதிவில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு காணொளி பதிவும் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஒன்றியங்களில் 819 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

மொத்தம் 574 வாக்குச்சாவடிகளில் 137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவை யொட்டி இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். பூத் ஏஜெண்டுகளும் 6 மணிக்கே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த காலி ஓட்டு பெட்டிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து 6 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கினர். 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஓட்டுப்பதிவு தொடங்கியதில் இருந்து பெண்கள், முதியவர்கள், வாலிபர்கள் என அனைத்து தரப்பினரும் காலையில் இருந்தே ஆர்வமுடன் ஓட்டு போட்டு சென்றனர். முன்னதாக வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் மூலம் கை கழுவிய பின்னரே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அனைவரும் முக கவசம் அணிந்து உள்ளே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல் துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் வாக்குச்சாவடியில் மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு மணிவண்ணன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

சில இடங்களில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கு பணியாற்றிய தன்னார்வலர்கள் உதவி செய்தனர். வள்ளியூர் பகுதியில் சில வாக்குச்சாவடிகளில் நடக்க முடியாமல் வந்த முதியவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற காவல் துறையினர் தூக்கி சென்று வாக்களிக்க வைத்த சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்திலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெண்களும், முதியவர்களும் ஆர்வமுடன் ஓட்டு போட்டு சென்றனர். கொரோனா வழிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர்.

சங்கரன்கோவில் யூனியனில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை 6 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதே போல் கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார்.

மாலை 5 மணிக்கு ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 5 மணிமுதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »