Press "Enter" to skip to content

திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் பக்தர்களுக்கான வசதிகள்- அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி பார்வை செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல், திருப்பதி கோவிலில் இருப்பது போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னை:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி., கனிமொழி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மானிய கோரிக்கையின்போது துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கோவில்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது, தங்கும் விடுதிகள், அன்னதானக்கூடம், முடிகாணிக்கை செலுத்தும் இடம், வியாபார கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், உதவூர்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அங்கபிரதட்சனம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும், பக்தர்கள் சாமி பார்வை செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல், திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இருப்பது போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதானக்கூடம் கீழ்தளம், முதல்தளம் என ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவிற்கு திட்டங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், டி.வி., கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். கோவிலை சுற்றியுள்ள பனை பொருட்கள், கடல் சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ள கடைகளைவிட அதிகளவில் விற்பனை கடைகள் அமைக்கப்படும். ரூ.300 கோடி செலவில் நடக்க இருக்கும் இந்த ஒருங்கிணைந்த திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் (விசாரணை) ந.திருமகள், இணை கமிஷனர் வான்மதி, திருச்செந்தூர் கோவில் இணை கமிஷனர், செயல் அலுவலர் அன்புமணி மற்றும் எச்.சி.எல். நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »