Press "Enter" to skip to content

29 ஆண்டுகளுக்குப்பிறகு குமரியில் அடைமழை (கனமழை)

வடகிழக்கு பருவமழை காலத்தில் குமரி மாவட்டத்தில் சராசரியாக 35 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும்.

நாகர்கோவில்:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடைமழை (கனமழை) கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும் கடந்த 2 நாட்களில் வரலாறு காணாத வகையில், இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

வழக்கத்தைவிட இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் குமரி மாவட்டத்தில் சராசரியாக 35 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும். அந்த மழை கடந்த சில தினங்களில் மட்டுமே பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு குமரி மாவட்டத்தில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1992-ம் ஆண்டு கடுமையான மழை பெய்துள்ளது. அதாவது ஒரே நாளில் குறைந்த நேரத்தில் 200 மி.மீ. முதல் 300 மி.மீ. வரை அடைமழை (கனமழை) பெய்ததாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். அதன்காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு திடீரென அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதாகவும், அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு தலா 50 ஆயிரம் கன அடி வீதம் 1 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டதாகவும் அதிகாரிகளால் கூறப்படுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

அதன்பிறகு கடந்த ஒகி புயலின்போது புயல் காற்றுடன் மழை பெய்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. 1992-க்குப்பிறகு கடந்த 2010-ம் ஆண்டிலும், 2018-ம் ஆண்டிலும் குமரி மாவட்டத்தில் அடைமழை (கனமழை) பெய்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »