Press "Enter" to skip to content

அரசு பணியில் பிற மாநிலத்தவர் சேருவதை தடுக்கவே தமிழ்தாள் தேர்வு- அமைச்சர் விளக்கம்

எந்த ஒரு அரசாங்கத்துக்கும், நிர்வாகத்துக்கும் பணம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு மேல் மனிதவளம் முக்கியம். எனவே சரியான ஊழியரை சரியான வகையில் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து அவர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்று கண்காணித்து சிறப்பாக வழிநடத்துவது தான் ஒரு அரசாங்கத்தின் கடமை.

சென்னை:

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குரூப் 4 தேர்வுக்கு முன்பு இருந்த ஆங்கில நுழைவு தாள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக தமிழில் ஒரு தாள் வைக்கப்படும். இதிலும் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால்தான் மற்ற தேர்வும் கிரேடுக்கு போகும். இதன் முக்கிய விளைவு அரசு பணியில் அமரக்கூடிய, தினமும் தமிழ்நாட்டு மக்களை அணுகக்கூடிய பொறுப்புகளில் 10-ம் வகுப்பில் 40 சதவீதம் அளவுக்கு கூட தமிழ் புலமை இல்லையென்றால் அந்த பொறுப்புக்கு பொருந்தாது. அதை செயல்படுத்தும் வழியாக எல்லா திட்டங்களும், எல்லா சட்டங்களுக்கும் முதல்-அமைச்சர் தொலை நோக்கு பார்வையுடன் ஒரு தத்துவ அடிப்படையில் இலக்கை வைப்பார். அதை அந்தந்த துறையில் அந்தந்த வகையில் அமைச்சர்களும், அதிகாரிகளும், வல்லுனர்களுடன் கலந்து எப்படி செயல்படுத்தினால் முறையாக இருக்கும் என்று தெரிந்து செயல்படுத்துவது எங்களது கடமை.

செப்டம்பர் 13-ந் தேதி சட்டமன்றத்தில் அறிவித்த அந்த இலக்கை 2 தினங்களுக்கு முன்னால் வந்த அரசாணை நிறைவேற்றுகிறது. இனிமேல் நடக்கக்கூடிய தேர்வுகளுக்கு இது பொருந்தும். இதுவரை நடந்ததற்கோ இன்று பணியில் இருப்பவர்களுக்கோ விதி முறையில் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேர்வு ஒன்றை எடுத்து அதில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் வாங்க வேண்டும். அந்த நடைமுறை தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஏற்கனவே சில சம்பவங்கள் நடந்ததை நாம் அறிந்தோம். தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட சில இடங்களில் வெளி மாநில நபர்களுக்கு சில வேலை வாய்ப்புகள் தமிழ்ப்புலமை வழிகட்டாமல் வந்தது தெரிய வந்தது. அதை திருத்தும் வகையில் இந்த அரசாணை அமையும் என்று நம்புகிறோம்.

எந்த ஒரு அரசாங்கத்துக்கும், நிர்வாகத்துக்கும் பணம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு மேல் மனிதவளம் முக்கியம். எனவே சரியான ஊழியரை சரியான வகையில் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து அவர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்று கண்காணித்து சிறப்பாக வழிநடத்துவது தான் ஒரு அரசாங்கத்தின் கடமை. கொரோனாவுக்கு முன்பே இந்த துறையில் பல குளறுபடிகள் சுட்டிக் காட்டப்பட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டன.

அதன் பிறகு கொரோனா வந்ததால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. எங்களை பொறுத்த வரையில் அடிப்படையில் இந்த சிஸ்டத்தில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. இன்று பயிற்சி பெற்று காத்திருக்கும் நபர்களின் வேதனையும், தாக்கமும் எனக்கு தெரிகிறது.

அதே நேரத்தில் அடிப்படை மாற்றத்துக்கு இன்றைக்கு இதைத்தவிர சிறப்பான நாள் கிடைக்காது என்று தோன்றுகிறது. ஏனென்றால் 10 வருடத்துக்கு பிறகு ஆட்சி மாறியுள்ளது.முதல்-அமைச்சர் தெளிவாக இருக்கிறார். அனைவருக்கும் வாய்ப்பளித்து எல்லோருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும்.

இன்று தமிழ்நாடு அரசாங்கத்தில் பணியிடங்களின் எண்ணிக்கை 14 லட்சம் முதல் 15 லட்சம். இன்று இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை 9 லட்சம். நிறைய காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்பி செலவுகளை ஏற்றுக் கொள்ள அரசிடம் நிதி நிலைமை இல்லை.

அரசு பணி தேர்வு திட்டத்தில் ஒரு ஆண்டில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தேறி வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லா துறைகளிலும் தேவை இன்றைக்கு அதைவிட அதிகமாக 30 ஆயிரத்துக்கு மேல் இருக்கிறது. எனவே இதை நிரப்பவே 3 வருடம் ஆகி விடுகிறது. எனவே வயது வரம்பை 2 வருடம் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை -பிரதமர் மோடி

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »