Press "Enter" to skip to content

நெல்லையில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு- டிசம்பர் 26ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை

ஆவேசம் அடைந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர்.

நெல்லை:

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர்.  4 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படட்து. அப்போது, உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதேசமயம், உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல்  வகாப் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

பேச்சுவார்த்தைக்கு பிறகு விஸ்வரஞ்சன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அறிவித்த நிவாரண உதவியும் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களின் உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

விபத்து தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகம் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளிக்கு யாரும் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »