Press "Enter" to skip to content

தமிழகம் முழுவதும் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி
செலுத்தப்படுகிறது.

சென்னை :

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில், 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் இதுவரை தமிழகத்தில்1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 93 லட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். தற்போது 75 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் இதுவரை 87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »