Press "Enter" to skip to content

பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி பேச்சுவார்த்தை

டெல்லி தேசிய நினைவு சின்னத்திற்கு சென்ற பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி:

இந்திய-பிரான்ஸ் நாடுகளிடையே உள்ள உறவுகள் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

டெல்லியில் நிபுணர் குழுவுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற பார்லி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், தென் சீனக் கடலிலும் சீனா தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறது. கடற்பயண சுதந்திரத்தையும் சர்வதேச விதிகளுக்கு இணங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து பேசிய அவர், பயங்கரவாதத்தின் சவாலை தீவிரமாக கையாள வேண்டும் என்றும், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி புலோரன்ஸ் பார்லியை வரவேற்றேன். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, இந்தோ-பசிபிக் மற்றும் பிரான்சில் வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் ஜனாதிபதி பதவி குறித்து விவாதித்தோம். எங்கள் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »