Press "Enter" to skip to content

டாக்காவில் புனரமைக்கப்பட்ட காளி கோவிலை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வங்காளதேசம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

டாக்கா:

மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் தந்தையாகக் கருதப்படும் ஷேக் முஜ்பூர் ரகுமான் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இதையடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், இரு நாடுகளும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் விளைவாக கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு  உருவானது. இதன் பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

இதற்கிடையே, டாக்காவில் உள்ள காளி கோயிலை பாகிஸ்தான் ராணுவத்தினர் சூறையாடியதுடன், தீயிட்டும் எரித்தனர். அப்போது அங்கு வசித்த மக்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோவிலின் புனரமைப்பு பணிகளுக்கு இந்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.

இந்நிலையில், வங்காளதேச தலைநகர் டாக்காவில் 1971-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவத்தால் தகர்க்கப்பட்ட காளி கோவிலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். அதன்பின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், அவரது மனைவி சவீதாவும் காளிதேவியை வழிபட்டனர்.

அப்போது பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த காளி கோவிலை திறந்து வைத்ததை கவுரவமாக கருதுகிறேன். இந்தியா மற்றும் வங்காளதேச மக்களுக்கு இடையிலே உள்ள கலாசார மற்றும் ஆன்மிக பிணைப்புகளின் ஒரு சின்னமாக உள்ளது என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »