Press "Enter" to skip to content

பெரியப்பாவாக இருந்து அரசியலில் வழிகாட்டியவர் அன்பழகன்- நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்மொழிக்கும், பண்பாட்டுக்கும் சிறப்பு சேர்க்கும் 40-க்கும் அதிகமான நூல்கள் பலவற்றைப் படைத்தளித்தவர் பேராசிரியர் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளே உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

நம் இயக்கத்தினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பேராசிரியர் என்றால் நினைவுக்கு வருபவர் இனமானப் பேராசிரியர் ஒருவர்தான். அவருடைய நூற்றாண்டு தொடக்க விழா நாளை (டிசம்பர் 19).

எளிமையும், உறுதியும் பேராசிரியரின் அடையாளங்கள். தன்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையே அவர் எப்போதும் விரும்பினார். கடைப்பிடித்தார்.

கழகத்தின் தலைவராக அரை நூற்றாண்டுகாலம் தலைவர் கலைஞர் பொறுப்பு வகித்து வரலாற்றுச் சாதனை படைத்தார் என்றால், ஏறத்தாழ அதே கால அளவுக்கு கழகத்தின் பொதுச்செயலாளராகக் கொள்கை முழக்கம் செய்தவர் பேராசிரியர் பெருந்தகை.

திராவிட இயக்கத்தில் கலைஞர்-பேராசிரியர் நட்பு கொள்கை உறவுக்கான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இறுதிவரை மாறாத கொள்கைப் பயணம் என இருவரும் காட்டிய அன்பு, இலக்கியத்திற்கு ஈடானது.

சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இனமானப் பேராசிரியர் ஆற்றிய பணிகள் அனைத்திலும் துணிவும், தெளிவும் வெளிப்பட்டே வந்தன. மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை, நிதித்துறை என அவர் பொறுப்பு வகித்த பொறுப்புகள் அனைத்தும் அவரது சிந்தனையாலும், திட்டங்களாலும் பெருமை பெற்றன. எல்லாவற்றிலும் கழகத்தின் கொள்கைகளையே அவர் முன்னிறுத்திச் செயல்பட்டார்.

பேராசிரியப் பெருந்தகை எனக்கு பெரியப்பாவாக இருந்து பொதுவாழ்வில் தொடர்ந்து வழிகாட்டியவர். இளைஞரணி தொடங்கப்பட்ட போது அதன் தேவையை உணர்ந்து, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கியவர் அவர்.

இளைஞரணிச் செயலாளர் பொறுப்பினைத் தொடர்ந்து கழகத்தின் துணை பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக பொறுப்புகளை நான் சுமந்த போது பேராசிரியர் பெருந்தகை எனக்கு வழங்கிய ஆலோசனைகள் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்திடுவதற்கு உறுதுணையாக இருந்தன.

சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகராட்சி மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலங்களில் சட்டமன்றத்தில் பேராசிரியர் செயல்படுகின்ற பண்பான முறையினை உற்றுநோக்கி-உள்வாங்கி என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன். முனைப்பான உழைப்பால் எதையும் அடைய முடியும் என்கிற உறுதியையும், அதற்குரிய பருவம் வரை காத்திருக்க வேண்டும் என்ற பண்பையும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன்.

பேராசிரியப் பெருந்தகையின் சொற்பொழிவுகளைத் திராவிடத் தத்துவக் களஞ்சியம் எனலாம். தலைமுறை கடந்து இயக்கம் நிலைப்பதற்கும், கொள்கை தழைப்பதற்கும் பேராசிரியரின் உரை வீச்சு மகத்தான பங்காற்றியது.

நடமாடும் அறிவுக் கருவூலமாக, நூலகமாகத் திகழ்ந்தவர் இனமானப் பேராசிரியர். கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், பல்லாயிரக்கணக்கான நூல்களுடன் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், “பேராசிரியர் ஆய்வு நூலகம்” எனப்பெயர் சூட்டி இருப்பதிலிருந்தே இதனை உணர்ந்து கொள்ளலாம்.

தமிழ்மொழிக்கும், பண்பாட்டுக்கும் சிறப்பு சேர்க்கும் 40-க்கும் அதிகமான நூல்கள் பலவற்றைப் படைத்தளித்தவர் பேராசிரியர்.

பேராசிரியர் நூற்றாண்டினை கழகத்தின் தலைமை முதல் ஒவ்வொரு கிளை வரையிலும் கொண்டாடுவோம். அவர் ஊட்டிய இயக்க உணர்வை நிலைநாட்டிடுவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »