Press "Enter" to skip to content

தனியார் கைபேசி தொழிற்சாலையில் 8 பெண்கள் மாயமானதாக வதந்தி- மறியலில் ஈடுபட்ட 20 ஆயிரம் தொழிலாளர்கள்

தொழிற்சாலையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இந்த அதிகாலை 4.30 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே கைபேசி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஷிப்டு முறையில் வேலை செய்து வருகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதிகள் எடுத்து தங்க வைத்து உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பூந்தமல்லி அருகே விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட பெண்கள் 200 பேருக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த பெண் ஊழியர்கள் கெட்டுபோன உணவு சாப்பிட்டு இறந்து இருக்கலாம் என்ற தகவல் தொழிலாளர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது.

இதனால் ஆத்திரம் அடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்-ஆண் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வட்டம்பாக்கம், ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இந்த போராட்டம் காரணமாக சுங்குவார்சத்திரத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.

இதே போல் தாம்பரம்-வாலாஜாபாத் சாலை மறியல் போராட்டத்தால் சாலைகள் ஸ்தம்பித்து வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

சுங்குவார்சத்திரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண்-ஆண் தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு நின்றதால் அங்கு சென்னை-வேலூர் இடையேயும், வேலூர்-சென்னை இடையேயும் போக்குவரத்து தடைபட்டது.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முதலில் வாகன ஓட்டிகள் இறங்கி வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விடிய விடிய நடந்த இந்த போராட்டம் காலையிலும் தொடர்ந்தது.

போராட்டம் பற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டம் நடத்திய தொழிலாளர்களை விட போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சாலை மறியல் செய்த தொழிலாளர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து இன்று காலையில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை.

இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

சாலையில் நின்ற பொதுமக்களை காவல் துறையினர் இருபுறமும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் சாலையில் இருந்து வெளியேற மறுத்த சில ஆண் தொழிலாளர்களை தாக்கி, சட்டையை பிடித்து இழுத்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றினார்கள்.

இதை கண்ட பெண் தொழிலாளர்கள் காவல் துறை வாகனத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதனால் காவல் துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல் துறை சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் யாரும் இறக்கவில்லை. இறந்ததாக வதந்தி பரப்பி விட்டுள்ளனர். அவர்கள் வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கூறினார்கள்.

மேலும் காணாமல் போனதாக கூறப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரை செல்போனில் காணொளி காலில் பேச வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் சமரசம் அடைந்தனர்.

காலை 9 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினார்கள். முதலில் சுமார் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து சென்றனர். மீதமுள்ள 10 ஆயிரம் பேர் சாலை ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தனர். சுமார் 11 மணி அளவில் அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இதே போல் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இந்த அதிகாலை 4.30 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் செந்தில்குமார், திருவள்ளூர் துணை காவல் துறை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »