Press "Enter" to skip to content

அடுத்த 10 நாட்களில் 4 தடவை உத்தரபிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி

வருகிற 23-ந்தேதி காசிக்கு செல்லும் பிரதமர் மோடி லாகர்தாரா- மோகன் சாராய் இடையே 4 வழிச்சாலைக்காக அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா புதுவியூகம் வகுத்து வருகிறது.

உ.பி.யில் 4 முனை போட்டி உருவாகும் சூழ்நிலை உள்ளதால் பாரதிய ஜனதா இப்போதே இருந்து தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி சொந்த பாராளுமன்ற தொகுதியான வாரணாசியும் உத்தரபிரதேச மாநிலத்தில்தான் உள்ளது.

இதையடுத்து அவர் உ.பி. தேர்தலில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் பல்வேறு கட்டங்களாக உ.பி.க்கு சென்று தேர்தலுக்கு முன்பாக பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வாரணாசியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைத்தார்.

இன்று (18-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை 10 நாட்களில் பிரதமர் மோடி 4 தடவை உத்தரபிரதேசம் செல்கிறார். இன்று பிற்பகல் கங்கை விரைவு சாலைப் பணிக்காக அடிக்கல் நாட்டுகிறார்.

மீரட் முதல் பிரயாக் ராஜ் வரை ரூ.36,200 கோடி செலவில் 594 கிலோ மீட்டர் நீளத்திற்கு கங்கை விரைவு பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த விரைவு சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கும் தரை இறங்குவற்கும் வசதியாக சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் விமானம் ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகளுக்காக பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த பணிகள் அனைத்தும் 2024-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 21-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரயாக் ராஜ் பகுதிக்கு வருகிறார். அங்கு பிரமாண்ட யாத்திரையை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2½ லட்சம் பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

23-ந்தேதி மறுபடியும் பிரதமர் மோடி காசிக்கு வருகிறார். லாகர்தாரா- மோகன் சாராய் இடையே 4 வழிச்சாலைக்காக அடிக்கல் நாட்டுகிறார். அதே நாளில் ரூ.1500 கோடிக்கு பொது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதையடுத்து வருகிற 28-ந்தேதி மோடி கான்பூர் செல்கிறார். அங்கு அவர் மெட்ரோ தொடர் வண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »