Press "Enter" to skip to content

அதிகாரிகள்- போலீசாரை ஒருமையில் பேசினால் அரசு வேடிக்கை பார்க்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் மேம்பாலங்களில் தமிழகத்தின் பாரம்பரியங்கள் வளர்ச்சிகள் போன்றவற்றை ஓவியங்களாக வரையும் பணி துவங்கப்பட உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோவை:

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற மேம்பாட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுப்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி ‘ஸ்ட்ரீட் ஆர்ட்’ என்ற அமைப்புடன் இணைந்து கட்டிடங்களில் அழகிய ஓவியங்கள் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீர் அமைப்பதற்காக முதல் கட்டமாக 200 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார். அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல் கட்டமாக 289 பணிகளுக்கு ஒப்பந்தம் விடக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் மேம்பாலங்களில் தமிழகத்தின் பாரம்பரியங்கள் வளர்ச்சிகள் போன்றவற்றை ஓவியங்களாக வரையும் பணி துவங்கப்பட உள்ளது. அரசு கட்டிடங்கள் முழுவதும் எந்தவிதமான சுவரொட்டிகளும் இல்லாத வகையில் சுவரோவியங்கள் வரையப்படும்.

மே மாதம் 7-ந் தேதி தி.மு.க அரசு பதவி ஏற்றது முதல் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மீதம் இருக்கக்கூடிய வாக்குறுதிகளை படிப்படியாக முதல்வர் நிறைவேற்றுவார். கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெரும் வகையில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு ஒரே இடத்தில் முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவை மாவட்ட திட்டப்பணிகளுக்கு பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை முதல்வர் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பது தங்களுடைய நிலைப்பாடுகளில் குறிப்பாக கடந்த காலங்களில் 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அரசியல் இயக்கங்களோ எந்தவிதமான கூட்டங்களும், நிகழ்ச்சிகளும் நடத்த முடியாத அளவிற்கு ஒரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதை மீறி நடப்பவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையெல்லாம் மறந்துவிட்டு மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நிலையில் நேற்று பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

அரசு அதிகாரிகளை, காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு வேடிக்கை பார்க்காது.

கோவையைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி நிதிகளை பெற்றதாகவும், அதற்கான பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் மக்களிடத்தில் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். 2013-ம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்ட சாலை பணிகளை கூட மேற்கொள்ளவில்லை. பல்வேறு திட்டங்களுக்காக பெறப்பட்ட நிதிகளை சம்பளம் வழங்கக் கூடிய அல்லது வேறு பயன்பாடுகளுக்கு அந்த விதிகளை மாற்றி பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் செய்யாத பணிகளை குறிப்பாக மாநகராட்சி மூலம் ரத்து செய்யப்பட்ட பணிகளை நாம் என்ன செய்ய முடியும். ஆனால் அந்த பணிகள் எல்லாம் ரத்து செய்யாமல் விரைவில் அதற்கான பணிகள் எல்லாம் துவங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அந்த பணிகள் எல்லாம் துவங்கப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் பேசக்கூடிய வார்த்தைகள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்க்காது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்.

தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி அடிப்படையில் தான் கடந்த கால ஆட்சியில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள், ஊழல் செய்து இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் தவறு செய்தவர்கள் மீது கொள்ளை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை உக்கடம் அருகே உள்ள குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசுகளை வழங்கினார்.

இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையாளர் ‌ஷர்மிளா, முன்னாள் எம்.பி., நாகராஜன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்…அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »