Press "Enter" to skip to content

வேகத்தை செயலில் மட்டும் காட்டுங்கள்- மு.க.ஸ்டாலின்

விபத்துக்கு மிக முக்கியமான காரணம் அதிகபடியான வேகம்தான். சாலையில் வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை குறையுங்கள். வேகத்தை உங்களது உழைப்பில் செயலில் மட்டும் காட்டுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை:

“இன்னுயிர் காப்போம்” திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியாவில் இருக்கக் கூடிய முதல்- அமைச்சர்களில் முதலிடம் என்று சொல்வதை விட பெருமை எனக்கு என்ன வந்து சேரும் என்று சொன்னால் இருக்கின்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதை தான் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக வளர்ச்சியில், மகளிர் மேம்பாட்டில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க வேண்டும் என்று நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.

அதே நேரத்தில் வறுமையில், பசியில் குற்றங்கள் நடப்பதில், சாலை விபத்துக்கள் நடப்பதில் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும். ஆனால் சாலை விபத்துக்களை பொருத்த வரையில் நமது நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அது நமக்கு மிகுந்த வருத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.

சாலை விபத்துக்களால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு உயிரிழப்புகளிலும் அந்த நபர் மட்டுமின்றி அந்த குடும்பத்தின் எதிர்காலமே ஒடுங்கி விடுகிறது. அவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகிறார்கள்.

சாலை விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம்வயதினர் என்பதையும் எண்ணி பார்க்கின்ற நேரத்தில் விலைமதிக்க முடியாத இளைஞர்களின் எதிர்காலத்தை சேர்த்தே எடுத்து சென்று விடுகிறது.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு தனி மனிதரும் அவர் தரக்கூடிய உயிர் அது அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல. இந்த அரசுக்கும், நாட்டுக்கும் மிக மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.

அந்த வகையில் சாலை விபத்துகளால் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளை குறைக்கக் கூடிய நோக்கத்தோடு தமிழக அரசால் வகுக்கப்பட்டு இருக்கக் கூடிய திட்டம்தான் இன்னுயிர் காப்போம் திட்டம்.

விபத்து நடக்க கூடாது, விபத்து காரணமாக எந்த உயிரும் பறிபோகக் கூடாது என்கிற அந்த நடவடிக்கைகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். முழுமையாக ஈடுபட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எல்லாம் அரசு சார்பில் முதல்-அமைச்சர் என்கிற முறையோடு நான் தெரிவித்து இருக்கிறேன்.

விபத்தில் உயிர் போவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நேரமும், காலமும்தான். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்து விட்டால் நிச்சயமாக அந்த உயிரை காப்பாற்ற முடியும். காலதாமதம் ஆகின்ற போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை மருத்துவர்கள் “கோல்டன் அவர்ஸ்” என்று சொல்வதுண்டு.

விலை மதிக்க முடியாத அந்த தருணத்தில் எடுக்கக் கூடிய முடிவுகள், துரிதமான செயல்பாடுகள்தான் மனித உயிர்களை காப்பாற்றுகிறது. விபத்தை எதிர்கொள்பவர் அடையக்கூடிய மாபெரும் துன்பம் என்பதும் அந்த நேரம்தான்.

அப்படி சேர்க்கப்படக் கூடிய இடம் அரசு மருத்துவமனையா? தனியார் மருத்துவமனையா? என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திட வேண்டும். அதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதனால்தான் இந்த திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்து இருக்கிறோம்.

48 மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சை அளித்து உடனடியாக கவனித்து விட்டால் பெரும்பாலும் உயிர்கள் காப்பாற்றப்படும். அப்படியானால் அதற்கு பிறகு என்ன என்று நீங்கள் கேட்பது எனது செவிகளில் விழாமல் இல்லை.

அதன் பிறகுதான் முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் இருக்கிறது. அதில் சிகிச்சை பெறலாம். சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைகளும், தீவிர சிகிச்சைகளும் முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே அந்த கவலையும் யாருக்கும் வேண்டாம். உயிர் காக்கக் கூடிய அவசர சிகிச்சைகள் பெரும்பாலும் முதல் 48 மணி நேர காலத்திலேயே தேவைப்படுகின்ற சூழ்நிலையில் இந்த அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு பல தனியார் மருத்துவமனைகள் தயக்கம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் விபத்துகளில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் அருகில் இருந்தாலும் பல நேரங்களில் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கே நோயாளிகளை கொண்டு செல்லக்கூடிய, அவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் நல்லது ஒரு தீர்வாகதான் இந்த திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது.

முதல் 48 மணி நேரத்துக்கு தேவைப்படக் கூடிய அவசர சிகிச்சை அனைத்தையும் அருகில் இருக்கக் கூடிய தனியார் மருத்துவமனைகள் மேற்கொள்ளக் கூடிய நோக்கத்தோடுதான் இந்த திட்டத்தை இன்றைக்கு நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.

சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். இத்திட்டத்துக்காக அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவ மனைகள், 408 தனியார் மருத்துவமனைகள் மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு அம்சமாக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தினர், வேறு நாட்டவர்கள் வேறுபாடுன்றி தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படக் கூடிய சாலை விபத்துக்களில் காயம் அடையும் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் உள்நோயாளிகளாக மருத்துவ மனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் 81 சிகிச்சை பேக்கேஜ் முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

48 மணி நேரத்தில் மேலும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையற்றவர்களாக இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை தேவைப்பட்டால் அவர்களுக்கு முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அல்லது தகுந்த வழிகாட்டுதலின் கீழ் தொடர் சிகிச்சைகள் வழங்கப்படும்.

அரசின் மிக முக்கியமான நோக்கம் விபத்து இருக்க கூடாது என்பதுதான். விபத்துக்கு மிக முக்கியமான காரணம் அதிகபடியான வேகம்தான். சாலையில் வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை குறையுங்கள். வேகத்தை உங்களது உழைப்பில் செயலில் மட்டும் காட்டுங்கள். சாலைகளில் காட்ட வேண்டாம்.

தெருவில் உங்கள் வேகத்தை காட்ட வேண்டிய தில்லை, காட்டவும் கூடாது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலையில் தலைக்கவசம் அணிய வேண்டும். சிலர் தலைக்கவசம்டை வாங்கிக் கொண்டுஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கின் பின்புறம் வைத்துக் கொள்வார்கள். போலீசாரை பார்த்ததும் எடுத்து போட்டுக் கொள்வார்கள்.

உயிரை பற்றி கவலைப்பட கூடிய மக்கள் அவர்களாகவே தலைக்கவசம் அணிந்து கொள்வார்கள் என்று கலைஞர் சொன்னார். முடி உதிரும் என்பதற்காக பலர் தலைக்கவசம் போட்டுக் கொள்வதில்லை.

இளைஞர்கள் அனைவரும் தங்கள் உயிரை காக்க கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இன்று கார்களின் விலைக்கு சமமாகஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) வந்திருக்கிறது. சில எந்திர இருசக்கரக்கலன்கள் (பைக்குகள்) கார்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)குகளை எல்லோரும் ஓட்டி விட முடியாது. அதற்கான பயிற்சியும், திறமையும் இருப்பவர்கள்தான் ஓட்ட முடியும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தருவதில் கவனமாக இருக்க வேண்டும்.

கார்களில் பயணம் செய்யும் போது எப்போதும் சீட் பெல்ட் அணிய வேண்டும். வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »