Press "Enter" to skip to content

வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் -எம்.பி.யின் கருத்தால் சர்ச்சை

18 வயதில் பெண் வாக்களிக்கும்போது ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? என சமாஜ்வாடி கட்சி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி:

பெண்ணின் திருமண வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. விரைவில் பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆனால் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாடி, இடதுசாரிகள், ஒவைசி கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திருமண வயது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. சையத் துபெய்ல் ஹசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவு தொடர்பாக சையத் துபெய்ல் ஹசன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சையத் துபெய்ல் ஹசன், ‘பெண்கள் கருவுறும் வயதை அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும். வயதுக்கு வந்த பெண்ணுக்கு 16 வயதில் திருமணம் செய்து வைத்தால் தவறில்லை. 18 வயதில் வாக்களிக்கும்போது, ஏன் அதே வயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? ’ என்றார்.

அதேபோல், சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு எம்.பி.யான சபிக்குர் ரகுமான் கூறும்போது, ‘இந்தியா ஏழை நாடாகும். எனவே, ஒவ்வொருவரும் தங்கள் மகளை குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொடுக்க விரும்புவார்கள். இதனால் மத்திய அரசு கொண்டு வரும் மசோதாவை நான் ஆதரிக்கமாட்டேன்’ என்றார்.

சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் கூறிய இந்த கருத்துகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், சமாஜ்வாடி கட்சிக்கும் இதுபோன்ற கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி ஒதுங்கிக்கொண்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »