Press "Enter" to skip to content

சாலை மறியலை கைவிட்ட ஊழியர்கள்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது

அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினர்.

காஞ்சிபுரம்:

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே கைபேசி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள், விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதும் வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த பெண் ஊழியர்கள் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு இறந்து இருக்கலாம் என்ற தகவல் தொழிலாளர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்-ஆண் தொழிலாளர்கள் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்   மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு முதல் விடிய விடிய நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்கள் மாயமானது தொடர்பாக வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். எனவே யாரும் அதை நம்ப வேண்டாம். யாரும் மாயமாகவில்லை என்றார். அத்துடன் மாயமானதாக கூறப்படும் ஒரு பெண்ணிடம் காணொளி காலில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். 

இதேபோல் அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினர். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை திரும்பப்பெற பெற்றனர். சுமார் 12 மணி நேரம் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்ததையடுத்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »