Press "Enter" to skip to content

எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தது அமேதி மக்கள்தான்… பேரணியில் ராகுல் காந்தி உருக்கம்

அமேதியில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது, மக்கள் பார்வையில் அரசாங்கத்தின் மீதான கோபம் உள்ளதாக தெரிவித்தார்.

அமேதி:

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே களப்பணியாற்ற தொடங்கிவிட்டன. பிரதமர் மோடி தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். பாஜகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் அதிரடி காட்டி வருகிறது. 

அவ்வகையில், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக அமேதியில் இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த பேரணியில் ராகுல் காந்தி எம்பி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பேரணியில் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், ‘அமேதியில் உள்ள ஒவ்வொரு பாதையும் இன்னும் அப்படியே உள்ளது. ஆனால், மக்கள் பார்வையில் அரசாங்கத்தின் மீதான கோபம் மட்டுமே உள்ளது’ என்றார்.

‘இதயங்களில் அமேதி மக்களுக்கு முன்பு போலவே இடமுண்டு. நாங்கள் இன்னும் அநீதிக்கு எதிராக ஒன்றுபட்டு உள்ளோம். நான் 2004ல் அரசியலுக்கு வந்தேன். அமேதியில் தான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டேன். அமேதி மக்கள் அரசியல் பற்றி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர். நீங்கள் தான் எனக்கு அரசியலுக்கான வழியை காட்டினீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி’ என்றும் ராகுல் காந்தி பேசினார்.

மேலும், சீனாவுடனான எல்லை பிரச்சனை, விவசாயிகள் மரணம் மற்றும் பாஜக மீதான குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார்.

காங்கிரசின் கோட்டையாக விளங்கிய அமேதி மக்களவை தொகுதியில், கடந்த தேர்தலில் ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னர் இரண்டாவது முறையாக ராகுல் அமேதிக்கு வந்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »