Press "Enter" to skip to content

சென்னையில் 1000 சாலைகளில் மெகா தூய்மைப் பணி தொடங்கியது

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகாரிகளின் தலைமையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

சென்னை:

சென்னை மாநகரை தூய்மை நகரமாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

மாநகர பகுதிகளை பசுமையாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் மாற்றும் வகையில் பூங்காக்கள், சாலையோர பகுதிகளை அழகுப்படுத்துதல், மேம்பாலத்தின் கீழ் பகுதிகளை அழகுப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர சென்னையில் உள்ள அரசு பொது சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பல வண்ணங்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

மேலும் சாலைகள், தெருக்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் பணி நடைபெறுகிறது. பகல் நேரங்களில் மட்டும் குப்பை கழிவுகளை அகற்றுவதோடு மட்டுமின்றி இரவு நேரங்களிலும் இந்த பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பருவமழை சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை நீரை அகற்றும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடத்தி முடிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது.

மழை-வெள்ளம் பாதிப்பால் நகரை அழகுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. இரவு- பகலாக நடைபெற்ற மீட்பு பணிகள் மூலம் தற்போது மீண்டும் தூய்மை பணி தொடங்கி உள்ளது.

மழையும் படிப்படியாக குறைந்ததால் இந்த பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அதிகாரிகளின் தலைமையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

பேருந்து செல்லக்கூடிய சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் குவிந்துள்ள குப்பைகள், மணல் குவியல்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இதனை கண்காணித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சென்னையை அழகுப்படுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கும்பணி தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள மேம்பாலங்கள், பூங்காக்கள், காலி இடங்கள் போன்றவற்றை அழகுப்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களையும் மாநகராட்சி வகுத்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »