Press "Enter" to skip to content

வரன்தேடுபவர்களை குறிவைத்து திருமணம்- 50 வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல்

திருமணத்திற்கு பெண் தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை சேர்ந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொழிஞ்சாம்பாறை:

சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.

அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர்கள், தங்களது பெயர் சுனில், கார்த்திகேயன் என்றும், புரோக்கர்களாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தங்களிடம் 24 வயது இளம்பெண் இருப்பதாகவும், பெண் பார்க்க கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறைக்கு வருமாறு கூறினர். மணிகண்டனும் அங்கு சென்றார்.

அப்போது புரோக்கர்கள் சபிதா(24) என்ற பெண்ணை காண்பித்து பிடித்திருக்கிறதா? என கேட்டனர். மணிகண்டனும் பெண் பிடித்திருக்கிறது என கூறவே, அவர்கள் உடனே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து 2 பேருக்கும் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். மேலும் அவரிடம் இருந்து திருமணம் செய்து வைத்ததற்கு ரூ.1½ லட்சம் பணமும் பெற்றனர்.

பின்னர் மணமக்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, சுனில், காத்திகேயன் மற்றும் அவர்களுடன் இருந்த 2 பேர் சபீதாவுக்கு ஊர் புதியது என்பதால் நாங்களும் உடன் வருகிறோம் என்று கூறி, சேலத்திற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்த மறுநாளே சபீதாவின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், எங்களுடன் சபீதாவை அனுப்பி வையுங்கள் என்று 5 பேரும் மணிகண்டனிடம் தெரிவித்தனர். அவரும் சபீதாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.

ஆனால் அங்கு சென்ற பின்பு அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் கொழிஞ்சாம்பாறைக்கு சென்று விசாரித்தார். அப்போது, சபீதா மற்றும் அவருடன் இருந்தவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொழிஞ்சாம்பாறை காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்த கார்த்திகேயன், சுனில், தேவி, சபீதா உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அந்த கும்பல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் இணைய தளங்களில் மணப்பெண், மணமகன் தேவை என விளம்பரங்களை கொடுப்போம். இந்த விளம்பரத்தை பார்த்து விட்டு, திருமணத்திற்கு பெண் தேடி வரும் வாலிபர்கள் பலரும் எங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பேசி விட்டு, அவர்களது கைபேசி எண்ணுக்கு, அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்போம்.

புகைப்படத்தை பார்த்து விட்டு, மீண்டும் எங்களை அந்த வாலிபர்கள் தொடர்பு கொண்டால், அவர்களின் முழுமையான விவரம், வசதியானவரா? பணம் தேறுமா? என்பதை எல்லாம் அறிந்து கொள்வோம்.

பின்னர் அவர்களை பெண் பார்ப்பதற்காக நாங்கள் சொல்கிற இடத்திற்கு வரவழைப்போம். அங்கு வைத்து அனைத்தையும் பேசி முடித்து விட்டு, உடனே திருமணம் செய்ய வேண்டும் என வாலிபர்களை நிர்பந்திப்போம். அவர்களும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வார்கள்.

இதையடுத்து அந்த வாலிபருக்கு எங்கள் கூட்டத்தில் இருக்க கூடிய பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவோம்.

திருமணம் முடிந்ததும், அவர்கள் ஊருக்கு புறப்படும்போது, அந்த வாலிபரிடம், பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததற்காக ஒரு தொகையும் பெற்று கொள்வோம். மேலும் பெண்ணுக்கு புது இடம் என்பதால், நாங்களும் உடன் வருகிறோம் என கூறி அங்கு செல்வோம்.

2 முதல் 3 நாட்கள் அங்கு தங்கியிருப்போம். பின்னர் பெண்ணின் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரை பார்க்க பெற்றோர் ஆசைப்படுவதாகவும், எனவே எங்களுடன் பெண்ணை அனுப்பி வைத்தால், சில நாட்களில் கொண்டு வந்து விடுவதாகவும் கூறுவோம்.

இதனை நம்பி அவர்களும் அனுப்பி வைப்பர். அதன்பிறகு நாங்கள் தலைமறைவாகி விடுவோம். கைபேசி உள்ளிட்டவற்றை ஆப் செய்து விடுவோம்.

நாங்கள் இதுவரை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளோம். அதோடு அவர்களிடம் இருந்து லட்சகணக்கில் பணத்தையும் வசூலித்து கொண்டு தப்பியோடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

அப்படி தான் சேலத்தை சேர்ந்த மணிகண்டனையும் ஏமாற்றி திருமணம் செய்து வைத்து, பணம் பறித்தோம். ஆனால் அவர் எங்களை பற்றி விசாரித்து காவல்துறையில் புகார் கொடுத்ததால் மாட்டி கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து காவல் துறையினர் கார்த்திகேயன், சுனில், தேவி, சபீதா உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சித்தூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »