Press "Enter" to skip to content

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 43,011 படுக்கைகள் உள்ளன. அதில் தற்போது 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பெருந்தொற்று சமூக பரவலாக மீண்டும் மாறி விட்டதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கிண்டி கொரோனா மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் இந்த மருத்துவமனைக்கு உட்பட்ட எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, கண் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை, கே.கே.நகர் அரசு மருத்துவமனை, தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை, மனநல மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் என மொத்தம் 8,660 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன.

தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஆக்சிஜன் அளவு 95-ஆக இருந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தவும், 92 முதல் 93 வரை இருந்தால் கவனிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆக்சிஜன் அளவு 90-க்கு குறைவாக இருந்தாலோ மற்றும் அதிக காய்ச்சல் பாதிப்பு இருந்தாலோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள இந்த அரசு மருத்துவமனைகளில் 921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் மருத்துவர் நாராயணபாபு கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 43,011 படுக்கைகள் உள்ளன. அதில் தற்போது 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் மட்டும் 8,660 படுக்கைகள் உள்ளன. அதில் 921 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 215 பேரும், ஸ்டான்லியில் 138 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 41 பேரும், ஓமந்தூராரில் 120 பேரும், கிண்டி மருத்துவமனையில் 290 பேரும் தற்போது சிகிச்சை பெறுகிறார்கள்.

மருத்துவக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள படுக்கைகள் தவிர மருத்துவ பணிகள் இயக்ககத்திலும், பொது சுகாதாரத்துறையிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »