Press "Enter" to skip to content

தேசிய புற்றுநோய் நிறுவன இரண்டாவது வளாகம் இன்று திறப்பு – காணொலி மூலம் பிரதமர் திறந்து வைக்கிறார்

பஞ்சாப் மாநில பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால் காணொலி மூலம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது வளாகம் கட்டப்பட்டுள்ளது. பிரதமரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

மொத்தம் 530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு 430 கோடி ரூபாய் நிதி உதவியும் மீதி தொகை மேற்கு வங்க அரசாலும் வழங்கப்பட்டுள்ளன. 

இன்று பிற்பகல் நடைபெறும் திறப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் பங்கேற்கும் பிரதமர் இரண்டாவது வளாகத்தை திறந்து வைத்து மேற்கு வங்க மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஜனவரி 7ஆம் தேதி மதியம் 1 மணிக்கு, கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். இந்த நிறுவனம் கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சுகாதாரத் திறனை அதிகரிக்கும்” என்று பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் நலத்திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர்  மோடி பஞ்சாப் மாநிலம் சென்றார்.

ஆனால்,போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனம்  அப்படியே நின்றது. பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடியை அடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்த பிரதமர் மோடி புதுடெல்லி திரும்பினார்.இதன் எதிரொலியாக கொல்கத்தாவில் இன்று நடைபெறும் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது வளாக திறப்பு விழாவில் பிரதமர் காணொலி காட்சி மூலம் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »