Press "Enter" to skip to content

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு- உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்.

புதுடெல்லி:

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்தார். அவர் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை நடத்தப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அதிகாரிகள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

கணினிமய மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது. தேர்தல் அறிவிக்கை ஜனவரி 14ம் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்கும். 

5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 14, பிப்ரவரி 20, பிப்ரவரி 23, பிப்ரவரி 27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய நாட்களில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகின்றன.

இதேபோல், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மணிப்பூரில் பிப்ரவரி 27ம் தேதி, மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »