Press "Enter" to skip to content

என்ன பாதுகாப்பு குறைபாடு இருந்தது? – பிரதமருக்கு பஞ்சாப் முதல் மந்திரி கேள்வி

பிரதமர் இருந்த ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் எந்தப் போராட்டக்காரர்களும் இல்லை என பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சன்னி தெரிவித்துள்ளார்.

சண்டிகர்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூருக்கு பயணம் மேற்கொண்டபோது, விவசாயிகள் போராட்டம் காரணமாக மேற்கொண்டு செல்ல முடியாமல் டெல்லிக்கு திரும்ப நேர்ந்தது. இந்த பாதுகாப்பு குளறுபடி விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடி அறிக்கை கேட்டது. இதுகுறித்து விசாரிக்க மந்திரிசபை செயலகத்தின் செயலாளர் (பாதுகாப்பு) சுதிர்குமார் சக்சேனா தலைமையில் உளவுப்பிரிவு இணை இயக்குனர் பல்பீர்சிங், சிறப்பு பாதுகாப்பு குழு ஐ.ஜி. சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.

இதற்கிடையே, அந்த குழு நேற்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூருக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கியது. பாதுகாப்பு குளறுபடி குறித்து ஆய்வு மேற்கொண்டது. மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்கள் முகாமிட்டு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

பிரதமர் இருந்த 1 கி.மீ. எல்லைக்குள் எந்த போராட்டக்காரர்களும் இல்லை. பிரதமரின் பாதுகாப்புக்காக 6,000 பாதுகாப்புப் பணியாளர்களும், சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரதமருக்கு என்ன ஆபத்து வந்திருக்கும் என தெரியவில்லை.

பஞ்சாப்பில் பிரதமருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருந்தார். யாரும் அவருக்கு அருகில் செல்லவில்லை. இதுதொடர்பாக நான் பிரியங்கா காந்தியுடன் உரையாடினேன். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறியுள்ளேன் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »