Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் அவசரமாக வெளியேறியபோது மாயமான சிறுவன் கண்டுபிடிப்பு

தலிபான்கள் ஆட்சியை பிடித்தபோது, அசாதாரண சூழ்நிலை ஏற்பட மக்கள் விமானத்தை பிடிக்க அவசரம் காட்டியபோது, சோகைல் என்ற சிறுவன் மாயமானான்.

காபூல்:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. அப்போது அமெரிக்க தூதரகத்தில் பாதுகாவலராக பணிபுரிந்த மிர்சா அலி அகமது, அவரது மனைவி சுரயா ஆகியோர் தங்களது மகன் சோகைல் அகமது மற்றும் 4 குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானை விட்டு அவசரமாக வெளியேற காபூல் விமான நிலையத்துக்கு சென்றனர்.

விமான நிலைய வாயிலை நெருங்கியபோது சிறுவன் சோகைல் அகமது கூட்டத்தில் நசுக்கப்படுவான் என்று கருதிய மிர்சா அலி அவனை அமெரிக்கர் என்று கருதி சீருடை அணிந்த சிப்பாய் ஒருவரிடம் ஒப்படைத்து விமான நிலையத்துக்குள் கொண்டு வந்து தருமாறு கூறினார்.

விமான நிலையத்துக்குள் சென்று மகனை தேடியபோது அவனை காணவில்லை. அந்த சிப்பாயும் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை.

இது பற்றி மிர்சா அலி அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். அப்போது அவர்கள் சிறுவனை வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி இருக்கலாம். மீண்டும் சிறுவனை உங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று கூறினார்.

இதையடுத்து மிர்சா அலி குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் ராணுவ தளத்துக்கு விமானம் சென்றதும் மிர்சா அலி மகனை தேடிப்பார்த்தார். ஆனால் அந்த விமானத்தில் சிறுவன் வரவில்லை.

இதையடுத்து பல மாதங்களாக தேடிப்பார்த்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே மிர்சா அலி காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது விமான நிலையத்துக்கு சவாரி சென்ற கால்டாக்சி டிரைவர் ஹரீத் சபி என்பவர் சிறுவன் சோகைல் அகமது அழுது கொண்டிருப்பதை பார்த்தார்.

அவர் சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சோகைல் அகமதுவின் பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சபி தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் சோகைல் அகமதுவை தானே வளர்க்க முடிவு செய்தார். அவருக்கு முகமது அபேட் என்று பெயரிட்டனர். சபிக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். அனைத்து குழந்தைகளும் ஒன்றாக இருக்கும் படங்கள் சபி தனது பேஸ்புக்கில் பதிவிட்டார்.

இதை அறிந்த சிலர் அந்த புகைப்படங்களை பகிர்ந்தனர். வடகிழக்கு மாகாணமான படாக்சானில் வசித்த சோகைல் அகமதுவின் தாத்தா இதையறிந்து உறவினர்களுடன் சேர்ந்து சபி வசிக்கும் முகவரியை கண்டுபிடித்தார்.

பின்னர் அவர் 2 பகல், 2 இரவுகள் பயணம் செய்து சபியின் வீட்டை வந்தடைந்தார். தனது பேரன் சோகைல் அகமதுவை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறி அவருக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்தார். ஆனால் சோகைலை திருப்பி கொடுக்க சபி மாறுத்தார்.

சிறுவனை அவனது தாத்தாவிடம் ஒப்படைக்கும்போது கதறி அழுத டாக்சி டிரைவர்

இதையடுத்து முகமது ரசாவி செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடினார். அவர்கள் சபியிடம் பேசி குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். குழந்தையை 5 மாதங்கள் கவனித்துக் கொண்டதற்காக ஒரு தொகையையும் சபியிடம், முகமது ரசாலி வழங்கினார்.

இதையடுத்து காவல் துறையினர் முன்னிலையில் குழந்தை சோகைலை காபூல் அழைத்து வரப்பட்டு தாத்தா முகமது விடம் ஒப்படைக்கப்பட்டான். தற்போது குழந்தை சோகைவின் தந்தை அமெரிக்காவில் மிக்சிகன் மாகாணத்தில் வசித்து வருகிறார். அவரிடம் குழந்தையை ஒப்படைக்கும் பணியில் முகமது ரசாவி ஈடுபட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »