Press "Enter" to skip to content

கடைகள் அனைத்தும் அடைப்பு: டிரோன்கள் மூலம் காவல் துறை கண்காணிப்பு- சாலைகள் வெறிச்சோடின, மக்கள் வீடுகளில் முடக்கம்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, காவல் துறை தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 6-ந்தேதி முதல் இரவுநேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இதன்படி கடந்த 3 நாட்களாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் காரணமாக இதற்கு முன்பும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படி நீண்ட நாட்களுக்கு பிறகு முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் முதல் ஞாயிற்றுக்கிழமையாக இந்த ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.

முழு ஊரடங்கையொட்டி இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சிறிய மளிகைக்கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள் வரை எப்போதும் ஞாயிற் றுக்கிழமைகளில் பரபரப்பாக செயல்படுவதுண்டு. ஆனால் இன்று முழு முடக்கம் காரணமாக அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்து இருந்தனர்.

இதேபோன்று பெரிய வணிக வளாகங்களும் பூட்டப்பட்டு இருந்தன.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கினர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே தங்களது வாகனங்களில் பயணம் செய்ததை காண முடிந்தது.

ட்ரோன் கண்காணிப்பு

ஆஸ்பத்திரிகளில் பணிபுரிபவர்கள், கல்லெண்ணெய் நிலையங்களில் பணியாற்றுபவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமே தங்களது அடையாள அட்டைகளை காட்டி பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதன்காரணமாக தமிழகம் முழுவதும அனைத்து முக்கிய சாலைகளிலும் ஒரு சில மோட்டார் மிதிவண்டிகள், கார்கள் ஆகியவை மட்டுமே ஓடின. வாடகை ஆட்டோக்கள் பெரிய அளவில் இயக்கப்படவில்லை.

ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே ஆட்டோக்கள் இயங்கியதை காணமுடிந்தது.

முழு ஊரடங்கையொட்டி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை பிடிப்பதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சென்னை உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, சேலம் உள்பட அனைத்து இடங்களிலுமே காவல் துறையினர் சாலைகளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது உரிய அடையாள அட்டையை காட்டியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நகரப்பகுதிகளில் இது போன்று காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டிருந்த நிலையில் புறநகர் பகுதிகளில் பொது இடங்களில் ஒன்றாக கூடியவர்களை கண்காணிக்க காவல் துறையினர் டிரோன் ஒளிக்கருவி (கேமரா)க்களையும் பயன்படுத்தினர்.

குறிப்பாக குளம் மற்றும் ஏரிக்கரைகள், ஊர்களையொட்டியுள்ள காட்டுப்பகுதிகள் ஆகியவற்றில் தேவையில்லாமல் கூடுபவர்களை டிரோன் ஒளிக்கருவி (கேமரா) மூலம் கண்காணித்து விரட்டும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.

சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் நேற்று 10 மணியில் இருந்து தொடங்கப்பட்ட வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காவல் துறை கமி‌ஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் அனைத்து காவல் துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு ரோந்து பணியில் ஈடுபட்டவர்கள் இன்று காலையில் பணியை முடித்த நிலையில் அந்தந்த இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் மாற்று காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டனர்.

சென்னையை போன்று தாம்பரம், ஆவடி காவல் துறை கமி‌ஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளுக்குட்பட்ட இந்த இடங் களில் காவல் துறை கமி‌ஷனர்கள் ரவி, சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரது தலைமையில் ரோந்ந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

இதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களிலும் மாவட்ட காவல் துறை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் ஊரடங்கு கட்டுப் பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலைகள் உள்பட 44 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது. காந்திரோடு, காமராஜர் சாலை, மூங்கில்மேடு சந்திப்புகள் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்ட காவல் துறைசூப்பிரண்டு மருத்துவர் சுதாகர் காஞ்சீபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 1200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இன்று காலையில் மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 126 வழக்குகள் போடப்பட்டுள்ளன’ என்றும் தெரிவித்தார்.

இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் விசாரிக்கும் அதிகாரிகள்

ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என ஆய்வும் செய்வும் அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் வணிக பகுதிகளில் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இது போன்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊரக அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவும் காலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது பொது மக்கள் பலர் ஊரடங்கு விதிகளை மீறி அதிகளவில் வெளியில் சுற்றியதை காணமுடிந்தது.

ஆனால் இன்று கடைபிடிக்கப்பட்டுவரும் முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கின் போது மக்கள் வெளியில் சுற்றுவது வெகுவாக குறைந்துள்ளது என்றும், ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »