Press "Enter" to skip to content

குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு

கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புது டெல்லி:

தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். 

இந்நிலையில்  இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

ஏற்கனவே மேற்கு வங்காளத்தின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »