Press "Enter" to skip to content

தமிழகத்தில் இந்தி படிப்பதை தடுக்கவில்லை- உயர்நீதிநீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை:

கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கில், நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அறிவித்துள்ளது.

பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது.

தேசிய கல்விக் கொள்கை இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கவில்லை. தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது.

அன்னிய மொழியான ஆங்கிலத்தை அனுமதிக்கும்போது நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது அரசியல்சட்டத்துக்கு விரோதமானது.

கல்வித்தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்கச் செய்துவிடும் என்பதால் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை  மாநில அரசு முடிவெடுக்கலாம் என்ற போதும், இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும், வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது எனவும், கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றுவதால், கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அட்வகேட் ஜெனரல், இந்தி படிப்பதை யாரும்  தடுக்கவில்லை. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »