Press "Enter" to skip to content

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு வாய்மூடி இருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுக்கவும் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள், கடந்த 23-ம் தேதி அன்று வேதாரண்யம் கடற்கரையிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 300 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 30 லிட்டர் டீசல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்துவதன்மூலம், தமிழக மீனவர்களை, அவர்களது பாரம்பரிய பாக் வளைகுடா மீன்பிடி கடல் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுப்பதை இலக்காகக் கொண்டு இலங்கை செயல்படுவதை காண முடிகிறது.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய அரசு வாய்மூடி மௌனமாக இருத்தல் கூடாது.

அதேபோன்று இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசின்  மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வரும் பிப்.7 முதல் பிப்.11 வரை  ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்து வருகிறது.

இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிக்கும் அல்லது சேதப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »