Press "Enter" to skip to content

பீகாரில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக் காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பீகார் காவல் துறையினர் விரட்டியடித்தனர்.

பாட்னா:

பீகாரில் தொடர்வண்டித் துறை ஆள் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்வு எழுதியவர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு தொடர் வண்டிநிலையங்களில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சில பகுதிகளில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. நவாடாவில், மாணவர்கள் தொடர் வண்டிபாதை பராமரிப்பு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர், தொடர் வண்டிநிலைய வளாகங்களை சூறையாடினர்.  ஆராவில் பகுதியில் தொடர் வண்டிபெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதேபோல் சீதாமர்ஹி, பக்சர், முசாபர்பூர், சாப்ரா, வைஷாலி, கயா தொடர் வண்டிநிலையம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பாட்னா தொடர் வண்டிகாவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார் மண்டல் தெரிவித்துள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்வண்டித் துறை ஆள்தேர்வு வாரிய அதிகாரிகள் மற்றும் தொடர்வண்டித் துறை பணியாளர்கள் முயன்றபோது மாணவர்கள் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காவல் துறையினர் அவர்கள் மீது லத்தி சார்ஜ் செய்தும், கண்ணிர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். மேலும் எச்சரிக்கும் விதமாக தொடர்வண்டித் துறை காவல்துறை வானத்தை நோக்கி பல ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த மோதலில் ஆறுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் 12க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தனர்.    போராட்டம் காரணமாக பீகாரின் பல்வேறு பகுதிகளில் புறநகர் ரயில்கள் ஓடவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »