Press "Enter" to skip to content

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை?

அ.தி.மு.க. தரப்பில் சட்டமன்றத்துக்கு தலா ஒரு இடம் என்ற விகிதத்தில் 21 வார்டுகள் மட்டுமே வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை பா.ஜனதா தரப்பில் ஏற்கவில்லை.

சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. மனு தாக்கல் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.

ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

அப்போது அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலே இடங்கள் ஒதுக்குவதால் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று இரவு அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் அவசர கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், ‘தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்பு மாநில தலைமையின் ஒப்புதல் பெற வேண்டும். மாநில தலைமையின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாவட்ட தலைவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை இழுபறி நிலையிலேயே உள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியிலும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்றனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரம் நடந்தது.

பா.ஜனதா தரப்பில் 20 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடங்களை ஒதுக்கும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் நாகர்கோவில், கோவை ஆகிய 2 மேயர் பதவிகளையும், 25 நகராட்சி தலைவர் பதவிகளையும் கேட்டுள்ளனர்.

பா.ஜனதாவின் கோரிக்கையை அ.தி.மு.க. தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் செல்வாக்கு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கித்தருவதாக கூறி உள்ளனர். இதன்படி பார்க்கும் போது பா.ஜனதா எதிர்பார்ப்பதை விட மிக குறைந்த அளவிலேயே இடங்களை ஒதுக்க சம்மதித்துள்ளார்கள். இதை பா.ஜனதா குழுவினர் ஏற்கவில்லை.

மேயர் பதவியை பொறுத்தவரை நாகர்கோவில் மாநகராட்சியை மட்டும் கொடுக்க சம்மதித்துள்ளனர். கோவை மாநகராட்சியை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டனர். முக்கியமாக சென்னை மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டில்தான் இரு கட்சிகளுக்கு இடையேயும் சுமூகமான உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் 21 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதியில் 2 வார்டுகள் என்ற வீதத்தில் மொத்தம் 42 வார்டுகள் கேட்டுள்ளனர்.

ஆனால் அ.தி.மு.க. தரப்பில் சட்டமன்றத்துக்கு தலா ஒரு இடம் என்ற விகிதத்தில் 21 வார்டுகள் மட்டுமே வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை பா.ஜனதா தரப்பில் ஏற்கவில்லை. 42 இடங்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் உடன்பாடு ஏற்படாமலேயே கூட்டம் முடிந்தது. கூட்டணியில் எந்த கசப்பும் இல்லை. சில பிரச்சினைகள் உள்ளன. தொடர்ந்து பேசுவோம் என்று அண்ணாமலை கூறினார்.

இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்படி மாவட்ட தலைவர்களுக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் மூலம் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து வருகிறார்கள். இன்று மாலைக்குள் தலைமை அலுவலகத்துக்கு பட்டியலை அனுப்பி வைக்கும்படி கூறி உள்ளனர்.

எதிர்பார்த்த அளவுக்கு அ.தி.மு.க.விடம் இன்று இடங்கள் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதற்காகவே பா.ஜனதா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. தரப்பிலும் மாவட்ட செயலாளர்களிடம் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட தயாராக உள்ள வேட்பாளர் பட்டியல்களை அ.தி.மு.க. தலைமை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 மாவட்ட செயலாளர்களும் நேற்று இரவு தலைமை கழகத்தில் பட்டியலை ஒப்படைத்தனர். நாளை (திங்கட்கிழமை) அமாவாசை என்பதால் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் பா.ஜனதாவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »