Press "Enter" to skip to content

1820 மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் – ராமதாஸ்

மருத்துவர்கள் தேவை அதிகரித்து இருப்பதால் நீக்கப்படும் மருத்துவர்களை சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட அம்மா சின்ன (மினி) கிளினிக்குகளில் பணியாற்றி, மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த 1820 மருத்துவர்களும், சுமார் 2000 பன்நோக்கு மருத்துவப்பணியாளர்களும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் 1807 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப்பகுதிகளில் 460 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2267 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவை தொடக்க காலத்தில் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே புற நோயாளிகள் சேவைகளை வழங்கி வந்தன. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் இவை மேம்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மகப்பேறு உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றன.

இவற்றுக்கான மருத்துவர்கள் தேவை அதிகரித்து இருப்பதால் நீக்கப்படும் மருத்துவர்களை சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம். எனவே, அம்மா சின்ன (மினி) கிளினிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களை முந்தைய ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் தமிழக அரசு பார்க்கக்கூடாது.

அவர்களின் வாழ்வாதாரம், தமிழக அரசின் தொடக்கநிலை மருத்துவ மையங்களில் சேவையை வலுப்படுத்துவதற்கான மருத்துவர்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »