Press "Enter" to skip to content

தை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

அம்மா மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக் கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

அமாவாசை தினங்களில் முன்னோர் வழிபாடு செய்வது மரபாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் திரளும் பொது மக்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து, பிண்டம் கரைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருடமண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

இதற்கான ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர்.

முன்னதாக புரோகிதர்கள் முன்னோர்களின் பெயர்களை படித்து வேதங்கள் ஓதி இந்த வழிபாட்டை நடத்தினர். தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணியாமலேயே வந்திருந்தனர். இருந்த போதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டே இருந்தனர்.

தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் பக்தர்கள் புனித நீராடினர். சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் நீராடினர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அம்மா மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக் கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

இதேபோல் முசிறி காவிரிக்கரை, புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில் பல்லவன் குளம், அறந்தாங்கி அருகே மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »