Press "Enter" to skip to content

இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி- தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ரமேஷ் சென்னிதலா வருகை

கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கவும், தி.மு.க.விடம் பேசி உடன்பாட்டை எட்டவும் டெல்லியில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் பற்றி அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்களுடன் பேசி உடன்பாடு செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டங்களில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையின்போது காங்கிரசுக்கு மிகக்குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 10 சதவீதத்துக்கும் குறைவாக இடங்கள் ஒதுக்குவதால் காங்கிரசார் ஏற்க தயங்குகிறார்கள்.

இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் பேச்சுவார்த்தைகளில் சுமூகமான உடன்பாடு எட்டும்படி தி.மு.க.வினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் காங்கிரஸ் 21 வார்டுகளை எதிர்பார்க்கிறது. ஆனால் தி.மு.க. தரப்பில் 12 இடங்கள் மட்டுமே தருவதற்கு சம்மதித்ததால் காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில் கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் காங்கிரசார் தனித்து போட்டியிடப் போவதாக கூறி உள்ளது. கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை தீர்க்கவும், தி.மு.க.விடம் பேசி உடன்பாட்டை எட்டவும் டெல்லியில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவை மேலிடம் நியமித்துள்ளது.

அவர் இன்று மாலையில் சென்னை வருகிறார். அவருடன் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத்தும் வருகிறார். இன்று இரவு அல்லது நாளை காலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்கள். அதன்பிறகு தான் உடன்பாடு தெரிய வரும் என்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »