Press "Enter" to skip to content

மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

அண்டை நாடான மியான்மரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

பேங்காக்:

மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நாட்டின் பாராளுமன்றம் கூடவிருந்த நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் அங்கு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அந்த நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் நியாயப்படுத்தினார். இதை வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதிகாரத்தைத் தக்கவைக்க இராணுவம் கடும் அடக்குமுறையை பயன்படுத்தியது. அதன் ஜனநாயக ஆதரவாளர்களுடன் மோதலை அதிகப்படுத்தியுள்ளது, சில வல்லுநர்கள் நாடு உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாக விவரிக்கின்றனர்.

பாதுகாப்புப் படையினரால் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாகவும், 8,800 பேர் சித்ரவதை செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர். எதிர்ப்பை கட்டுப்படுத்த ராணுவம் கிராமங்களை இடித்துத் தள்ளியதால் 3,00,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ராணுவத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் 12 பேரை கைது செய்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »