Press "Enter" to skip to content

ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிப்பு: இதுதான் புதிய இந்தியாவா?- ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் மோடி சுயசார்பு இந்தியா குறித்து வலியுறுத்தி வரும் நிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

ஐதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமத்துவ சிலை என பெயரிடப் பட்டுள்ளது. ராமானுஜரின் 1000 ஆண்டுகள் பூர்த்தி ஆனதன் நினைவாக ரூ.1,200 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆஸ்ரமவளாகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலையை பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து இச்சிலையையும், இங்கு கட்டப்பட்டுள்ள 108 திவ்ய தேச வைணவ கோயில்களையும் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம்நகருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம்  ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ராமானுஜரை தரிசித்துள்ளதாக ஆஸ்ரம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ராமானுஜரின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் தற்போது வெளியாகின. இதை ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதாவது சிறு, குறு, தொழில்களை ஊக்கப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் ஆத்மநிர்பார் எனும் திட்டத்தையும், சிலையையும் ஒப்பிட்டு ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், ‘சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியா சீனா நிர்பார் (சீனா தயாரிப்பு) என மாறிவிட்டதோ’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்மூலம் சுயசார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் குறித்து அடிக்கடி பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக  விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் 14-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது- இஸ்ரோ தகவல்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »