Press "Enter" to skip to content

இந்தியா மதசார்பற்ற நாடா… அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- உயர்நீதிநீதி மன்றம் சரமாரியாக கேள்வி

கோவில்களில் அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.

சென்னை:

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த பொது நல மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

கடந்த 1947-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை.

கடந்த 1970-ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர்நீதிநீதி மன்றம் 1972-ல் ரத்து செய்தது. ஆனால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழைவாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அவர்களது பாரம்பரிய ஆடைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், “கோவில் மரபுபடி உடை அணிந்து வர வேண்டும். தஞ்சை, மதுரை போன்ற கோவில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருகின்றனர். இதற்கும், வெளிநாட்டவர்கள் கோவிலுக்குள் நுழைவதை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள் கருத்து தெரிவித்து கூறியதாவது:-

பல கோவில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுகிறது. மதசார் பற்ற நாட்டில் ஹிஜாப், கோவில்களுக்குள் வேட்டி கட்டி வரவேண்டும் என்பதற்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்டதா?

அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா? ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோவிலில் அந்த மரபு உள்ளது?

அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா?

இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், “தற்போது அதுசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் வாதாடுகையில் கூறியதாவது:-

“கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர்நீதிநீதி மன்றம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் ரத்து செய்து விட்டது. பல கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய கூடாது என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவில் மற்றும் சில தென்மாவட்ட கோவில்களில் ஆண் பக்தர்கள், மேலாடை அணிய கூடாது என்ற ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஆனால், உயர்நீதிநீதி மன்றம் எந்த ஆடை கட்டுப்பாடும் விதிக்க முடியாது. இந்து அல்லாதோர், கொடி மரத்தை தாண்டி கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோவில்களில் அமலில் உள்ளது

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து, மதச்சார் பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது. இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்று கூறிய நீதிபதிகள், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »