Press "Enter" to skip to content

கமலாலயம் மீதான தாக்குதல் – என்.ஐ.ஏ.விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம் என பா.ஜ.க. தகவல்

நியாயமான விசாரணைக்கு திமுக அரசு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க.பொதுச் செயலாளர் சி.டி.ரவி குறிப்பிட்டுள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் கல்லெண்ணெய் குண்டுகளை வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்ற கீழ் மகன் (ரவுடி)யை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க.அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து பா.ஜ.க.பொதுச் செயலாளரும், கர்நாடகா மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான சி.டி.ரவி,  ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக பாஜக அலுவலகம் மீது நள்ளிரவு 1 மணியளவில் 2 கல்லெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. சிலர் எங்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். நியாயமான விசாரணைக்கு திமுக அரசு உத்தர விட வேண்டும். தவறினால் சி.பி.ஐ. மற்றும் என்.ஐ.ஏ. விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை பா.ஜ.க.அலுவலகம் மீது கல்லெண்ணெய் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டவுடன் மிக விரைவாக செயல்பட்ட காவல்துறை,முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் முன்னரே, தடயவியல் நிபுணர்களை கூட அழைக்காமல் அவசர, அவசரமாக குற்ற நிகழ்வு இடத்தை தூய்மை படுத்தி இருக்கிறார்கள்.

தமிழக காவல்துறையின் இந்த அதிவேக நடவடிக்கை எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எதற்காக ஆதாரங்களை எல்லாம் அழிக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டது. குற்றவாளிகள் யார் சொல்லி இதை செய்தார்கள் என்று தெரிய வேண்டும்.

இதையெல்லாம் தனி மனிதர் செய்ய வாய்ப்பில்லை. இதற்கு பின் உள்ள மிகப் பெரிய சதியை கண்டு பிடிக்க வேண்டும். ஆகவே இதனை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று கோருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »