Press "Enter" to skip to content

மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்

கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.

கோவை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட என்ற தலைப்பில் காணொலி வாயிலாகவும், இணைய வழியிலும் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் மதுரையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மதியம் 1.30 மணியளவில் வருகிறார்.

அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தேர் மூலம் போட்டிகோர்சில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

மாலை 3.30 மணியளவில் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்ய வேட்பாளர்களை சந்தித்து ஆலோசிக்கிறார்.

அதன்பின்னர் மக்கள் நீதிமய்ய வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மாலை 4 மணிக்கு பி.என்.பாளையம் காய்கடை பகுதியில் இருந்து கமல்ஹாசன் தனது பிரசார பயணத்தை தொடங்குகிறார். 4.20 மணிக்கு ரெட்பீல்ஸ் ரோடு, 4.40 மணிக்கு ராமநாதபுரம் 80 அடி ரோடு, 5.10 மணியளவில் சுந்தராபுரம் சந்திப்பிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தொடர்ந்து கோட்டை மேடு, ஹவுசிங்யூனிட், காட்டூர், காமராஜபுரம், தெப்பக்குளம் மைதானம், ராஜவீதி, கெம்பட்டி காலனி மைதானம், பொன்னையராஜபுரம் (பாரத் கல்லெண்ணெய் பங்க்), சீரநாயக்கன்பாளையம் (மாரியம்மன்கோவில்), இடையர்பாளையம் சந்திப்பு, சிவானாந்தா காலனி சந்திப்பு, தனலட்சுமி நகர், மட்டசாலை பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அனைத்து இடங்களிலும் திறந்த வாகனத்தில் இருந்த படியே மக்கள் மத்தியில் பேசி மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

கோவையில் பிரசாரத்தை முடித்து கொள்ளும் கமல்ஹாசன் இன்று இரவே கோவை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »