Press "Enter" to skip to content

சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் 18-ந்தேதி இயக்கம்

திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புறங்களில் மட்டுமே இத்தேர்தல் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்டன.

இந்த தேர்தலில் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் பயணத்திற்கு பொது மக்கள் அதிக அளவு முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பொதுவாக வார இறுதிநாளான வெள்ளிக்கிழமைகளில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கருதுகின்றனர்.

அதனால் (18-ந்தேதி) வெள்ளிக்கிழமை அன்று கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள கூடும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2 லட்சம் பேர் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.

கிராமப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பொதுமக்கள் அதிக அளவு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்த அளவுக்கு இந்த தேர்தலில் வெளியூர் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் குறைந்த அளவிலான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசு விரைவு பஸ்களிலும் எதிர்பார்த்த அளவிற்கு இடங்கள் நிரம்பவில்லை. ஆனாலும் பொதுமக்கள் நலன் கருதி கடைசி நேரத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

18-ந்தேதி பொதுமக்களின் தேவையை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் கூடுதலாக பஸ்களை இயக்கவும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »