Press "Enter" to skip to content

உக்ரைனை ரஷ்யா தாக்க அதிக வாய்ப்பு உள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

நாங்கள் உக்ரைன் மீது படையெடுக்க போவதாக அமெரிக்கா தான் கூறி பீதி ஏற்படுத்தி வருகிறது என ரஷ்யா அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறியுள்ளார்.

வாஷிங்டன்:

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்தது.

நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா படைகளை குவித்ததால் உக்ரைனை தாக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. மேலும் கிழக்கு ஐரோப்பியாவுக்கு அமெரிக்கா கூடுதல் படைகளையும் அனுப்பியது.

இதனால் உக்ரைன்- ரஷ்யா எல்லையில் தொடர்ந்து போர் பதட்டம் நீடித்து வருகிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைன் மீது ரஷ்யா இன்று (16-ந் தேதி) படையெடுக்கலாம் என்ற தகவல் வெளியானது.

இதற்கிடையே ரஷ்யா எல்லையில் இருந்து தனது படைகளை குறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யா அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறும்போது, ‘எல்லைப் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்ட ரஷிய படையின் ஒரு பகுதியினர் பயிற்சி முடிந்ததால் தங்களது நிலைகளுக்கு திரும்புகின்றனர்.

உக்ரைனுடனான எல்லை பகுதியாக இருந்தாலும் ரஷ்யா அங்கு போர் பயிற்சியை மட்டும் தான் மேற்கொண்டு வருகிறது. பயிற்சி முடிந்ததும் படைகள் அங்கிருந்து வெளியேறிவிடும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். நாங்கள் உக்ரைன் மீது படையெடுக்க போவதாக அமெரிக்கா தான் கூறி பீதி ஏற்படுத்தி வருகிறது’ என்றார்.

எல்லையில் இருந்து ரஷிய படைகள் திரும்பி வருவதாக ரஷ்யா கூறினாலும் அதனை அமெரிக்கா ஏற்கவில்லை. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்வோவிடம் தொலைபேசியில் பேசும் போது, ‘எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படை யெடுப்பு திறன் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.

எல்லையில் இருந்து படைகள் திரும்பபெறுவதற்கான மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க நேட்டோ ஆவணங்களுக்கு ரஷ்யாவின் எழுத்துப்பூர்வ பதிலை எதிர்நோக்குகிறோம்’ என்றார்.

இந்த நிலையில் உக்ரைனை ரஷ்யா தாக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்கூறும் போது, ‘உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யாவுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தக்க பதிலடிகளை கொடுக்கும்.

உக்ரைனை சுற்றியுள்ள பகுதிகளில் சில வீரர்களை திரும்ப பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால் படை திரும்ப பெறுவது பற்றி இன்னும் உறுதி செய்யவில்லை. எங்களின் தகவலின்படி ரஷிய படைகள் இன்னும் அச்சுறுத்தி வருகின்றன.

எல்லையில் 1½ லட்சம் ரஷிய வீரர்கள் உள்ளனர். ரஷ்யாவில் நேரடியாக மோத அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.

ரஷிய குடிமக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் நீங்கள் எங்களது எதிரி அல்ல. உக்ரைனுக்கு எதிரான அழிவுகரமான போர் மற்றும் ரத்தம் சிந்துவதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் நம்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும் போது, ‘ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் உளவுத்துறைகளின் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவே வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய படைகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். ரஷ்யா வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »