Press "Enter" to skip to content

மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தால் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது – உதயநிதி ஸ்டாலின்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. கண்டிப்பாக நிறைவேற்றும் என தி.மு.க. இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த சில நாட்களாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்குவோம் என்று பேசி வருகிறார். சட்டமன்றத்தை முடக்கினால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கி பாருங்கள். மீண்டும் தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.

மாநகராட்சியாக அறிவித்த திண்டுக்கல்லில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஓராண்டில் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 9 மாதங்களில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவில் 3-ம் அலை கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அரசு கஜானா காலியாக இருந்தது. மேலும் ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்தது. இருந்தபோதும் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி கொரோனா நிவாரண தொகை, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கல்லெண்ணெய் விலையில் முதல் கட்டமாக ரூ.3 குறைப்பு ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்னும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. கண்டிப்பாக நிறைவேற்றும். அதன்படி மகளிருக்கான உதவி தொகை வழங்கப்படும் தேதியை முதல்வர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »