Press "Enter" to skip to content

விட்டுட்டு போயிடாதீங்கப்பா… ஸ்கூல் எப்ப முடியும் டீச்சர்… நர்சரி பள்ளிகளில் பாசப் போராட்டம்

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட நர்சரி பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல மறுத்து அடம்பிடித்து அழுதனர்.

தமிழகத்தில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் உயர்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பிரிகேஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்காமல் இருந்தன.

இந்த நிலையில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16-ந்தேதி) முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நர்சரி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

குழந்தைகள் பள்ளிகளுக்கு எப்போது செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பெற்றோர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது. 2 ஆண்டுகளாக குழந்தைகளின் படிப்பு வீணானதை எண்ணி கவலை அடைந்த பெற்றோர்கள் இன்று குழந்தைகளை உற்சாகமாக பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த ஆண்டு பிரிகேஜி சேர்ந்த குழந்தைகள் மற்றும் ஏற்கனவே எல்.கே.ஜி., யு.கே.ஜி. படித்து வரும் குழந்தைகள் அனைவரும் இன்று பள்ளிகளுக்கு சென்றனர். குழந்தைகளை காலையிலேயே தயார்படுத்தி புத்தக பையுடன் உணவையும் பெற்றோர்கள் கையில் எடுத்து சென்றனர். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால் முரண்டு பிடிக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததால் அவர்களை பெற்றோர்கள் பாசமழை பொழிந்து பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர்.

முதன்முதலாக பள்ளி வாசலில் இன்று கால்வைத்த குழந்தைகள் ஒருவித புதிய சூழ்நிலையை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிக்கு வந்த குழந்தைகளை ஆசிரியைகள் அன்போடு வரவேற்று அழைத்து சென்றனர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்க விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளிலும் குழந்தைகளை கவர வித்தியாசமான அணுகுமுறைகளை கையாண்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு வரும் சூழ்நிலையில் அழும் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ‘மிக்கிமவுஸ்’ வேடம் அணிந்து குழந்தைகளை உயர் வகுப்பு மாணவர்கள் வரவேற்றனர்.

குழந்தைகளுக்கு மிக்கிமவுஸ் கை கொடுத்து வரவேற்றதோடு இனிப்பு வழங்கினார்கள். உற்சாகமாக வந்த குழந்தைகள் வகுப்பறையில் விட்டவுடன் அழ தொடங்கினார்கள். ஒவ்வொரு குழந்தைகளும் ‘அம்மா… அப்பா…’ என்று கூச்சலிட்டனர்.

குழந்தைகள் ஒவ்வொருவராக அழத் தொடங்கியதால் என்ன செய்வதென்று புரியாமல் ஆசிரியைகள் திகைத்தனர். பள்ளிக்கு வெளியே நின்ற பெற்றோருக்கு போன் செய்து குழந்தைகளிடம் கொடுத்தனர்.

ஒரு சில பெற்றோர் வீட்டிற்கு சென்றபோதும் அவர்களுக்கும் போன் செய்து குழந்தைகளிடம் கொடுத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆசிரியைகள் ஈடுபட்டனர். குழந்தைகளின் அழுகை குரலை கேட்டு பெற்றோரும் அழுதனர். அவர்களின் குரலை கேட்டு கண் கலங்கினார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேசி அழுகையை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் ஒரு சில குழந்தைகள் அழுது கொண்டே இருந்தது. அவர்களுக்கு செல்போனில் விளையாட்டு, பாடல்கள் காண்பித்து அழுகையை நிறுத்துவதற்கு பெரும்பாடுபட்டனர். கைபேசியை கையில் கொடுத்தவுடன் குழந்தைகள் அழுவதை முற்றிலுமாக நிறுத்தினார்கள்.

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட நர்சரி பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல மறுத்து அடம்பிடித்து அழுதனர். இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நர்சரி பள்ளிகளில் இன்று பாச போராட்டமே நடைபெற்றது.

சென்னை செனாய்நகர் மாநகராட்சி நர்சரி பள்ளியில் இன்று காலையில் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் ஆசை ஆசையாக அழைத்து வந்தனர். அப்போது பல குழந்தைகள் வகுப்பறைக்கு செல்லாமல் அடம்பிடித்து அழுதன.

என்னை விட்டுட்டு போய்டாதப்பா… என்று ஒரு சிறுமி தந்தையின் தோளை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தது. இதேபோன்று பல குழந்தைகள் பெற்றோரை பிரிய மனமின்றி அழுதன. அவர்களை பள்ளி ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

முதல்நாள் என்பதால் குழந்தைகளுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை விட்டு விட்டு வீடுகளுக்கு செல்லாமல் வெளியேயே அமர்ந்திருந்தனர். 3 மணி நேரம் எப்படி குழந்தைகள் இருப்பார்கள்? என்ற மன நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் கவலையுடன் பள்ளி வாசல் முன்பு காத்து நின்றனர்.

மதியம் 12 மணிக்கு வகுப்புகள் முடிந்தவுடன் பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்கள் குழந்தைகளை கையில் தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »