Press "Enter" to skip to content

தி.மு.க. ஒரு கட்சி அல்ல, கார்ப்பரேட் நிறுவனம்- எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது காணொலியில் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசி வருகிறார் என்று ஓசூரில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஓசூர் ராம்நகரில் இன்று நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களுக்காக 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் தற்போது காணொலியில் அவர் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

அ.தி.மு.க மக்களுக்காக உழைக்கும் கட்சி. அ.தி.மு.க வேட்பாளர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். எனவே அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்,

முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகிறது. தி.மு.க. ஒரு கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம்,

வடநாட்டில் இருந்து ஏஜெண்ட்டை இறக்கி தேர்தலில் வெற்றி பெற்றார்கள், கவர்ச்சியான விளம்பரங்களை கூறி வெற்றி பெற்றது திமு.க.. ஆனால் அ.தி.மு.க.வோ எதை செய்ய வேண்டுமோ அதை கூறியது.

நாங்கள் சொன்னதை செய்தோம். சொல்லாததையும் செய்தோம். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், ஏன், முதலமைச்சராக கூட ஆகலாம்.

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் கொடுப்பது, முதியோர் உதவி தொகை உயர்த்துதல், சுய உதவி குழுக்கள் கடன், மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து போன்ற எதையுமே தி.மு.க. செய்யவில்லை.

தி.மு.க.விற்கு வாக்களித்தவர்கள் தங்களது தங்க நகைகளை பறிகொடுத்தது தான் மிச்சம். கடந்த 2011, 2016-ல் நடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது அ.தி.மு.க. விலையில்லா மிக்சி, பேன், கிரைண்டர், ஆகியவை கொடுத்தது அ.தி.மு.க.. மாணவர்களின் கல்வியை உயர்த்த மடிக்கணினி, உள்ளிட்ட அனைத்து உபகரணங்களை வழங்கி படிப்பதற்காக வசதிகளை செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.

நீட் விவகாரத்தில் விவாதம் செய்ய தயார் என்று நான் கூறினேன். அதற்கு இதுவரை தி.மு.க.விடமிருந்து எந்த பதிலும் இல்லை, மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். எழுதி கொடுப்பதை படித்து வருகிறார்.

12,110 கோடி ரூபாய் விவசாயிகளுக்காக பயிர் கடன் தள்ளுபடி செய்தது அ.தி.மு.க ஆட்சி. , பொங்கலுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுத்தது அ.தி.மு.க.

ஆனால் தற்போது பொங்கலுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன கொடுத்தார். அவர் கொடுத்த 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றவை, அதில் ரூ.500 கோடி ஊழலை தி.மு.க. அரசு செய்துள்ளது.

ஓசூர் மாநகராட்சி, நகராட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. அரசு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களையும், சாலை வசதி, ராமநாயக்கன் ஏரி அழகுப்படுத்தப்பட்டது, 20 கோடி செலவில் மலர்களை சந்தைப்படுத்த சர்வதேச மலர் ஏல மையம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை கல்லூரி, ஆர்.டி.ஓ அலுவலகம், ஆகியவை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சி. இதனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்”.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, நாகரசம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கிருஷ்ணகிரி சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே நடைபெற்றது.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும், வாழ்த்தியும் பேசினார்.

அப்போது அவர் பேசும் போது, ‘இன்றைக்கு ஆட்சி அதிகாரம் தி.மு.க.விடம் உள்ள நிலையில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் வகையில் அமையும். அதற்கு அ.தி.மு.க.வினர் அயராமல் பாடுபட வேண்டும். இந்த தேர்தல் இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்க வேண்டும்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »