Press "Enter" to skip to content

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்:இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
எச்சரித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. 

மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் நடைபெறும் வார்டுகளுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் அணையர் பழனிகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

இந்தகூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.  சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெறும் 19ம்  தேதியன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா பாதித்தவர்களுக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை  வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »