Press "Enter" to skip to content

இந்தியாவின் மிக குறைந்த வயது பெண் மேயர் ஆர்யாவுக்கு விரைவில் திருமணம்

இந்தியாவின் மிக குறைந்த வயது பெண் மேயர் ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர் எம்.எல்.ஏ.வை மணக்க இருக்கிறார்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் (வயது 23). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர் தான் இந்தியாவின் மிக குறைந்த வயது மேயர் என்ற பெருமையை பெற்றவர்.

கல்லூரி மாணவியான இவர் மேயராக பதவியேற்ற தகவல் நாடு முழுவதும் சமூகவலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு பரவியது. இந்தநிலையில் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுச்சேரி தொகுதி எம்.எல்.ஏ.வான கெ.எம்.சச்சின்தேவுக்கும் (28) விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

இதனை முறைப்படி சச்சின்தேவ் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ” எனக்கும், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு கட்சி தலைமையும் அனுமதி அளித்துள்ளது. தற்போது மாவட்ட அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்கள் நடைபெற்று முடிந்ததும் திருமணம் நடைபெறும். திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

சச்சின் தேவும் கேரள சட்டசபையில் மிக குறைந்த வயதுடைய எம்.எல்.ஏ. ஆவார். ஒரே கொள்கை பிடிப்புள்ள இருவரும் தம்பதிகளாக இணைவது மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »