Press "Enter" to skip to content

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- ஓட்டுப்பதிவுக்கு 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு

தமிழக போலீசாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை:

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது. காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு காவல் துறையினர் பாதுகாப்புக்காக தயார் நிலையில் உள்ளனர்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட காவல் துறை சூப்பிரண்டுகள், காவல் துறை கமி‌ஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. எக்காரணத்தை கொண்டும் தேர்தல் நாள் அன்று அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதியன்று தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

80 ஆயிரம் காவலர்கள், 12 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் தேர்தல் நாளன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 18 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

தமிழக போலீசாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் நாள் அன்று அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் வெளியாட்கள் வார்டுகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் அதன்பிறகு அனைத்து வார்டுகளிலும் உள்ளூர்காரர்களை தவிர வெளியாட்கள் யாரும் தங்கி இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் காவல் துறையினர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

வெளியூர்களில் இருந்து பிரசாரத்துக்காக வந்தவர்களை உடனடியாக வெளியேற சொல்லிவிடுங்கள் இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த துணை கமி‌ஷனர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.

திருவல்லிக்கேணியில் நேற்று மாலை துணை கமி‌ஷனர் பகலவன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் உதவி கமி‌ஷனர் பாஸ்கர் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 5,794 வாக்குச்சாவடிகளில் 1,100 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் துறை பாதுகாப்பு போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் அதிக வாக்குப்பதிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பதட்டமான சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுபோன்று மாநிலம் முழுவதும் அனைத்து பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நாள் அன்று ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி கண்காணிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பதட்டமான வாக்குச்சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக தேர்தலை நடத்த முடியும் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »