Press "Enter" to skip to content

சுவர்களில் ஒட்டப்பட்ட தேர்தல் விளம்பர ஸ்டிக்கர், நோட்டீசுகளை அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்

பொது இடங்கள் மற்றும் வீடுகளின் சுவர்களில் ஒட்டப்பட்ட தேர்தல் விளம்பர ஸ்டிக்கர், நோட்டீசுகளை அகற்றாவிட்டால் வேட்பாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் சென்னையில் ஒருசில பகுதிகளில் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. பொது இடங்கள் மட்டுமின்றி தனியார் சுவர்களில் உள்ள தேர்தல் விளம்பரங்களையும் அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக அரசு மற்றும் தனியார், பொது மற்றும் திறந்த வெளி இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டும் வேட்பாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி அரசு, பொது இடங்கள், தனியார் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மற்றும் சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

ஒரு சில இடங்களில் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அதை ஒட்டிய வேட்பாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சுவரொட்டி ஒட்டிய வேட்பாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மீது போடப்படும் அபராதம் தேர்தல் செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

எனவே வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தல், பரிசு பொருட்கள் வழங்குதலை தடுக்க 45 பறக்கும் படைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மேலும் 45 பறக்கும் படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த 90 பறக்கும் படைகளும் 3 வேளை சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் ரோந்து பணியில் இன்று முதல் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

மேலும் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் இன்று கணிப்பொறி குலுக்கள் மூலம் பிரித்து அனுப்பப்படுகிறது. 37 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்தது.

எனவே தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »